• Wednesday, March 29, 2017

    ஸ்வாமிராமானுஜர் - இது மட்டுமே அவசியம்! - 24

    https://docs.google.com/uc?export=download&id=0By8PLiufKlVPT1g3SEVVejRLS2c  (Thanks to Dinamalar & Mr.பா.ராகவன்)
    திருவரங்கம் பெரிய கோயிலின் நிர்வாக விவகாரங்களைப் பெரிய நம்பிதான் அப்போது கவனித்துக் கொண்டிருந்தார். ஆளவந்தாரின் பீடத்துக்குப் பொறுப்பேற்று ராமானுஜர் வந்து சேர்ந்த உடன், இந்தப் பணிகளும் அவருடையதாயின. பகல் பொழுதுகள் முழுதும் திருக்கோயில் ஊழியத்திலேயே அவருக்குக் கழிந்து கொண்டிருந்தது. மடத்துக்கு வந்து உட்கார்ந்தால் காலட்சேபம் கேட்க பக்தர்கள் வந்துவிடுவார்கள். இரவு உணவுக்குப் பிறகு படுக்கப் போகிற நேரத்தில்தான் சீடர்களுடன் கொஞ்சமாவது உரையாட அவகாசம் கிடைக்கும்.

    ராமானுஜருக்கு இது தான் பிரச்னையாக இருந் தது. தன்னளவில் அவர் ஓர் ஆத்மஞானி. வைணவம் என்னும் சித்தாந்தம் இயல்பிலேயே அவரது சிந்தனைப் போக்கை வடிவமைத்திருந்தது. தாம் சிந்திக்கும் வகைமைக்கு வைணவம் என்று பேர் என்பதை மட்டும்தான் அவர் போகப் போக அறிந்து கொண்டார். நம்மாழ்வார் தொடங்கி, ஆளவந்தார் வரை சொல்லி வைத்த அனைத்துமே இதன் விரிவும் ஆழமும் தேடிச் செல்கிற வழிகள்தாம் என்பதை அவர் உணர்ந்தார். எனவே சரணாகதியை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலின் அடி முதல் நுனிவரை பாடம் கேட்டு, அலசி ஆராய்ந்து பயிலும் பெருவிருப்பம் அவருக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.'சுவாமி, நான் பயிலவேண்டும். ஆளவந்தாரின் திருவடி சம்பந்தம் எனக்கு வாய்க்கவில்லை. அதற்குப் பதிலாக உங்களைச் சரண் புகுந்தேன். பாசுரங்களும் மற்றவையும் பயின்று கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும் போதாமை உறுத்துகிறது. அர்த்த விசேஷங்களில் மனம் லயித்துக் கிடக்கிறது. அனைத்தையும் அனைவர் மூலமும் அறிந்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கிடக்கிறேன். நீங்கள்தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்!' என்று பெரிய நம்பியின் தாள் பணிந்து கேட்டார் ராமானுஜர்.நம்பிக்குப் புரிந்தது. ஆளவந்தாரிடம் ஒரு வழக்கம் இருந்தது. தமது அனைத்துச் சீடர்களையும் அவர் சமமாகவே நடத்தினார்,

    அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார் என்றாலும் ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிட்ட மந்திரம் அல்லது சுலோகம் அல்லது தத்துவத்தின் சிறப்புப் பொருளைத் தமது பிரத்தியேகப் பரிசாக வழங்கியிருந்தார். அது இன்னொருவருக்குத் தெரியாது. சம்பந்தப்பட்டவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. அதைத்தான் ராமானுஜர் கேட்டார். எனக்கு அனைத்தும் வேண்டும். அனைவரிடம் இருந்தும் வேண்டும்.'புரிகிறது ராமானுஜரே. நானறிந்த த்வய மந்திரத்தைத் தங்களுக்கு போதிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.' என்று சொல்லிவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து வகுப்பை ஆரம்பித்தார்.'த்வயம் என்பது வேதங்களின் சாரம். காற்றைப் போல், ஒளியைப் போல் இவ்வுலகெங்கும் நீக்கமற நிறைந்து நீந்திக் கொண்டிருக்கும் அத்தனை மந்திரங்களிலும் ஆகச் சிறந்ததும் உயர்ந்ததும் இதுவே.''அற்புதம் சுவாமி! த்வய மந்திரத்தின் அவசியத்தை முதலில் சொல்லுங்கள்.' பெரிய நம்பி ஒரு கணம் கண்மூடி யோசித்தார். 'அவசியம்தானே? சொல்கிறேன். பந்தங்களில் இருந்து விடுதலை பெறவும் மிக நேரடியாக
    மோட்சத்தை அடையவும் இது அவசியம். இது மட்டுமே அவசியம்.'

    தொடர்ந்து பல நாள்களுக்குப் பெரிய நம்பி ராமானுஜருக்கு த்வய மந்திர வகுப்பெடுத்தார். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று அர்த்த விசித்திரங்கள் எத்தனை எத்தனையோ எல்லைகளைக் கடந்து வேதத்தின் மையத்தைச் சென்று தொட்டுக் காட்டியது.ராமானுஜர் ஆனந்தப் பரவசத்தின் உச்சத்தில் இருந்தார். எப்பேர்ப்பட்ட பெருங்கருணை இந்த மனிதருக்கு! அற்பனான என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சீடனாக ஏற்று எத்தனை உயர்வான விஷயங்களை போதிக்கிறார்!கண்ணீர் மல்க அப்படியே பெரிய நம்பியின் கால்களில் விழுந்து வணங்கினார்.'ஆசாரியரே! எத்தனை பூடகமான பேருண்மைகளை எனக்கு நீங்கள் எளிதாக விளக்கியிருக்கிறீர்கள் என்று விவரிக்கவே முடியாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தங்களுக்குக் கடன்பட்டிருப்பேன்.'
    பெரிய நம்பி புன்னகை செய்தார். 'ராமானுஜரே! நான் சொன்னதைக் காட்டிலும் அர்த்த விசேஷம் திருக்கோட்டியூர் நம்பியிடம் உண்டு. ஆளவந்தாரின் சீடர்களிலேயே மாபெரும் ரகசியப் பேழை என்றால் அவர்தாம். திருமந்திரமாகட்டும், த்வயமாகட்டும், சரம சுலோகமாகட்டும். அவர் அறிந்த அர்த்த ரகசியங்கள் அபாரமானவை. நாங்கள் ஒன்றாகப் பயின்றவர்கள்தாம். ஆனால் அவர் நன்றாகப் பயின்றவர்களில் ஒரு நாயகன் என்று சொன்னால் உங்களுக்கு விளங்குமா?'ராமானுஜருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. ஒரு மேதை. மாபெரும் ஞானி. அரங்கனின் அரவணைப்பில் வசிக்கிற பெருமான். ஆளவந்தாரின் நேரடிச் சீடர். தம்மைக் காட்டிலும் இன்னொருவர் உயர்ந்தவர் என்று கைகாட்டுகிறார் என்றால், இவரது பணிவின்
    ஆழ அகலங்களுக்கு முன் இப்பூவுலகு எம்மாத்திரம்?'இல்லை ராமானுஜரே! என்னைவிட அவர் உயர்ந்தவர். திருக்கோட்டியூர் நம்பி நம்பமுடியாத அளவுக்கு ஞானஸ்தர். ஆசாரியர் ஆளவந்தாருக்குப் பாதமும் கரமுமாக இருந்தவர். என்னைக் கேட்டால் நீங்கள் அவரை நேரில் சந்தித்துப் பாடம் கேட்பது மிகவும் அவசியம் என்பேன்.' என்றார் பெரிய நம்பி.'நீங்கள் அவரைப் பற்றிச் சொல்லும்போதே எனக்கு அவரைக் காண மனம் துடிக்கிறது சுவாமி. எங்கிருக்கிறார் அவர்? சொல்லுங்கள், இப்போதே புறப்படுகிறேன்.''சிவகங்கைக்குப் பக்கத்தில் உள்ள திருக்கோட்டியூரில்தான் வசிக்கிறார். ஆசாரியர் இருந்தவரை திருவரங்கத்திலேயே தங்கியிருந்தவர், அவரது மறைவுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போய்விட்டார்.''ஓ. ஒன்றும் பிரச்னையில்லை சுவாமி. நான் திருக்கோட்டியூருக்குச் சென்றே அவரை தரிசிக்கிறேன்.''நல்லது. மீண்டும் சொல்கிறேன், அவர் அத்தனை சாதாரணமான மனிதரல்ல. பாண்டிய நாட்டில் பெரியாழ்வார் வசித்து வந்த காலத்தில், அவருக்கு நெருக்கமான சீடராக இருந்த செல்வநம்பியின் வம்சத்தில் பிறந்தவர் இவர்.

    குருகேசன் என்பது இயற்பெயர். தெரியுமா உமக்கு? உங்களுடைய திருக்கச்சி நம்பிகூட இவரிடம் சிலகாலம் குருகுலவாசம் செய்திருக்கிறார்!''அப்படியா? நம்பிகள் சொன்னதில்லை. எப்படியானாலும் சரி, நான் திருக்கோட்டியூர் நம்பியைச் சென்று சேர்ந்து அவரிடம் ரகஸ்யார்த்தங்களைக் கற்றே தீருவேன்.'பெரிய நம்பி ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பிச் சென்றார்.அன்று இரவெல்லாம் ராமானுஜர் முதலியாண்டானிடம் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.'ஆசாரியர் ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளிய சமயம் திருக்கோட்டியூர் நம்பியை இங்கு சந்தித்தேன். ஆனால் அப்போது அவரைச் சரியாக அறிந்து கொள்ளவோ, பேசவோ முடியா மல் போய்விட்டது.''அதனாலென்ன சுவாமி! நாளை கிளம்பி விடுவோமல்லவா?''அவசியம். அதைவிட வேறென்ன வேலை நமக்கு?'திருவரங்கத்தில் இருந்து திருக்கோட்டியூர் சுமார் நுாறு காத துாரம் (337 கிலோ மீட்டர்). 'பல்லக்கெல்லாம் வேண்டாம்; ஆசாரியரை சேவிக்கப் போவதால் நடந்தே போய்விடுவோம்' என்றார் ராமானுஜர்.
    ஆனால், அவர் பதினெட்டு முறை நடக்க வேண்டியிருந்தது!

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Powered by Blogger.