
அவருக்கு இந்த உலகம் என்பது திருப்பதி மலையடிவாரத்தில் தொடங்கி, ஏழாவது மலை உச்சியில் உள்ள வேங்கடேசப் பெருமாளின் சன்னிதியில் முடிகிற பரப்பளவு கொண்டது. அவரது உலகத்தில் ஒருவர் மட்டுமே வசித்துக் கொண்டிருந்தார். வேங்கடம் எனும் அம்மலையின் பதியான எம்பெருமான். பெருமாளுக்கு தினசரி தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அவரைப் பிராந்தியத்தில் பெரிய திருமலை நம்பி என்று அழைத்தார்கள்.
திருவரங்கத்தில் வைணவ நெறி தழைக்கச்செய்து கொண்டிருந்த ஆளவந்தாரிடம் சீடராக இருந்தவர் அவர். ஆளவந்தார்தான் ஒருநாள் கேட்டார். 'வேங்கடமலைப் பெருமானுக்குக் கைங்கர்யம் செய்ய, பொறுப்பாக யாராவது அங்கு இருக்க வேண்டியுள்ளதப்பா. நமது மடத்தில் இருந்து யார் போகத் தயார்?'சீடர்கள் எதிரே அமர்ந்திருந்தார்கள். குரு சொன்னால் எதுவும் செய்யச் சித்தமாயிருந்த சீடர்கள். திருக்கோட்டியூர் நம்பி அவர்களுள் ஒருவர். திருமலையாண்டான் இன்னொருவர். திருவரங்கப் பெருமாளரையர் மற்றவர். பெரிய நம்பி. மாறனேர் நம்பி. இன்னும் எத்தனையோ பேர். எப்போதும் குருவின் சொல் வெளிப்பட்டு முடிவதற்குள், 'நான் தயார்' என்று எழுந்து நிற்கும் அவர்கள், அன்றைக்கு அவர் கேட்டு முடித்து நெடுநேரம் ஆன பிறகும் யோசித்தபடியே இருந்தார்கள்.காரணம், சிறிது அச்சம். அவர்கள் திருப்பதி மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள்.
ஆளரவமற்ற அபாயகரமான பிராந்தியம். ஏழு மலைகளுள் எது ஒன்றிலும் பாதை கிடையாது. ஏறிச் செல்வதும், இறங்கி வருவதும் எளிய விஷயங்களல்ல. மலைமீது கோயில் கொண்டிருந்த எம்பெருமானுக்குக் காவலாக நுாற்றுக்கணக்கான மிருகங்கள் மலையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பசித்த மிருகங்கள். பெரும்பாலும் அவை மனிதர்களை அங்கு நடமாடக் கண்டதில்லை. காண நேர்ந்தால் சும்மா விட்டு வைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஒரு ஆத்திர சகாயத்துக்கு நாலு பேர் உடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.'என்ன யோசிக்கிறீர்கள்?' என்றார் ஆளவந்தார்.யாரும் பதில் சொல்லாதிருந்த அச்சமயத்தில் ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. 'இன்றே கிளம்புவதா அல்லது நாளை கிளம்ப உத்தரவாகுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி!'அவர்தாம் ஸ்ரீசைல பூர்ணர் என்று அழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பி. ஆளவந்தார் புன்னகை செய்தார். அவரிடம் ராமாயணத்தின் உட்பொருள் பயில வந்தவர் அவர். தீயின் செஞ்சுடைப் போன்ற புத்திக் கூர்மை. புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு. ஆளவந்தாரின் பிரிய மாணாக்கர்.அன்றைக்குத் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி திருமலைக்குச் சென்று சேர்ந்தவர்தான். அதன்பிறகு அவர் இறங்கி வந்தது, தமது தமக்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபோதுதான். திருப்பெரும்புதுாரில் இருந்து மைத்துனர் ஆசூரி கேசவ சோமயாஜி தகவல் அனுப்பியிருந்தார். 'உமக்கு மருமகன் பிறந்திருக்கிறான். வந்து பார்த்து, பெயர் வைத்து ஆசீர்வதித்துச் செல்லவும்.'திருமலை நம்பிக்கு அதுவரை தனக்கு இரு தங்கைகள் இருக்கிற விஷயமே கூட நினைவில்லை. நாளும் பொழுதும் நாரணன் சேவையிலேயே கழிந்து கொண்டிருந்தது அவருக்கு. சட்டென்று மருமகன் பிறந்திருக்கிற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தார்.
அது பிங்கள வருஷம் (கி.பி.1017). சித்திரை மாதம் பன்னிரண்டாம் தேதி வளர்பிறை பஞ்சமி திதி கூடிய வியாழக்கிழமை. திருவாதிரை நட்சத்திரத்தில் மருமகன் மதியம் பன்னிரண்டு மணிக்கு ஜனித்திருக்கிறான்.ஆ..., ராகுவின் நட்சத்திரத்தில் அல்லவா பிறந்திருக்கிறான்? இவ்வுலகில் மாபெரும் மகான்கள், ஞானஸ்தர்கள் அத்தனை பேரும் இதுவரை ராகு அல்லது கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். தவிரவும் கடக லக்னம். அது தலைமைப் பதவிக்கான நுழைவாயில். லக்னாதிபதி சந்திரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறான். ஆக, ஆலயப் பணிகளில் நாட்டம் கொண்டவன். ஐந்தாம் இடத்தில் கேது உட்கார்ந்திருக்கிறான். சந்தேகமேயில்லை. ஒன்று சாம்ராஜ்ஜியம் அல்லது சன்னியாசம்தான்!பெரிய திருமலை நம்பி அன்றே கிளம்பி திருப்பெரும்புதுாருக்கு விரைந்தார். தமக்கையின் மகனை அள்ளி ஏந்தி உச்சிமோந்து சீராட்டி னார். அவரது உள்ளுணர்வு அவருக்கு அனைத்தையும் சொன்னது. அது ஆதிசேஷன் அம்சம். வாராது வந்த மாமணி. குழந்தைக்கு இளையாழ்வான் என்று அவர்தான் பெயரிட்டது. 'காந்திமதி! உன் மகன் உலகை ஆளப் போகிறவன். அறத்தின் காவலனாக நின்று தழைக்கப் போகிறவன். இது அவதாரம். நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.
' காந்திமதியும், கேசவ சோமயாஜியும் நெக்குருகிப் போனார்கள். பெரிய திருமலை நம்பியின் தாள் பணிந்து மகிழ்ந்தார்கள். அன்றைக்கு ராமானுஜருக்குப் பெயர் வைத்துவிட்டுப் போன பெரிய திருமலை நம்பி மீண்டும் மலையை விட்டு இறங்கி வந்தது, ஏழு வருடங்கள் கழித்து அடுத்த தங்கைக்கு பிள்ளை பிறந்தபோதுதான். அவள் காந்திமதிக்கு இளையவள். பெரிய பிராட்டி என்று பேர். அவள் பிள்ளைக்கு கோவிந்தன் என்று பெயர் வைத்தார் நம்பி.'இவன் இளையாழ்வானுக்குப் பிந்தி பிறந்தவன் மட்டுமல்ல தங்கையே. அவனுக்கு நிழலே போல் எப்போதும் உடனிருக்கப் போகிறவனும் கூட. அவனால் தழைக்கப் போகிற அறங்களுக்கு இவன் காவலனாக இருக்கப் போகிறான்.' என்று சொல்லிவிட்டுப் போனார்.
அதைத்தான் ராமானுஜர் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் வந்ததுதான் அந்தப் புன்னகை. அதனாலேயேதான் அவர் கோவிந்தனை மீட்டுக் கொண்டு வரும் பொறுப்பைப் பெரிய திருமலை நம்பியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தார்.விவரம் தெரியாத ஒருவன் என்றால் யார் வேண்டுமானாலும் பேசி, மனத்தை மாற்றிவிட முடியும். கோவிந்தன் அப்படியல்ல. வேத வேதாந்தங்கள் பயின்றவன். பெரிய ஞானஸ்தன். ஒரு தரிசனம் போல் அவனுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது. கங்கையில் கிடைத்த சிவலிங்கம். ஒரு பெரும் பரவச நிலையில் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் லயித்துப் போனவன்.'எனக்கு அவன் வேண்டும் முதலியாண்டான்! வைணவ தரிசனம் வையம் முழுதும் பரவ வேண்டுமென்றால் அதற்கு வைராக்கிய சீலர்களின் தோள் வேண்டும். கோவிந்தனை மீட்டு வர நான் பெரிய திருமலை நம்பியைத்தான் நம்பியாக வேண்டும்' என்றார் ராமானுஜர். பேசிக்கொண்டிருந்தபோது மடத்தின் வாயிலில் யாரோ வருவது தெரிந்தது. 'யாரது...?' என்றார் ராமானுஜர்.உள்ளே நுழைந்தவர் ஒரு வயதான பெண்மணி. யாதவப் பிரகாசரின் தாயார்.
No comments:
Post a Comment