• Wednesday, March 29, 2017

    ஸ்வாமிராமானுஜர் - நன்மை பயக்கும் எனில் - 13

    https://docs.google.com/uc?export=download&id=0By8PLiufKlVPRW53SmtuRUlQNHc  (Thanks to Dinamalar & Mr.பா.ராகவன்)
    யாதவப் பிரகாசரின் தாய் என்னவோ பேசுவதற்காக வந்தாள். ஆனால், என்னென்னவோ பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போய்விட்டாள். ராமானுஜர் வெகுநேரம் அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தார்.

    'வாழ்வில் சில சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கு நமக்குக் காரணங்கள் புரிவதில்லை. நடக்கிற காரியத்தின் சரியான பக்கத்தில் நிற்கிறோமா, எதிர்ப்புறம் இருக்கிறோமா என்று அந்தக் கணத்தில் முடிவு செய்யவும் முடிவதில்லை. மனித வாழ்க்கை என்பதே சம்பவங்களின் சாட்சிக்கூண்டில் ஏறி நிற்பதுதானே? ராமானுஜருக்கே அந்த வினா இருந்தது. ஒரு பத்து நிமிஷப் பேச்சில் பேய் பிடித்த பெண்ணைச்சரி செய்துவிட முடிகிறது. பூணுால் அறுத்து, சிகை கழித்து சன்னியாசியான பரம அத்வைத சிரேஷ்டரின் தாயாருக்கு,'பரம்பொருளை நெருங்கச் சரியான பாதை உமது மகன் காட்டுவதல்ல'
    என்று எடுத்துச் சொன்னால் புரிந்து விடுகிறது. கோடீஸ்வரரான கூரத்தாழ்வான் தமது சொத்து சுகங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுத் தன்னிடம் சீடராக வந்து பணிந்து நிற்கிறார். காஞ்சி மாநகரமே கைகட்டி நிற்கிறது. ஆனால், பதினாறு வயதில் மணந்துகொண்டு, பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக உடன் வாழ்ந்த தஞ்சம்மாவை ஏன் தன்னால் சரி செய்ய இயலவில்லை?எத்தனையோபேர் என் பேச்சைக் கேட்கிறார்கள். பரம்பொருளான
    நாரணனின் பாதம் பற்ற முன்வருகிறார்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொன்னால் சரி என்கிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தில் அந்தணனா, பஞ்சமனா என்ற கேள்விக்கே இடமில்லை என்றால் ஒப்புக்கொள்கிறார்கள்.

    சரணாகதியை விஞ்சிய உபாயமில்லை என்று சொல்லும் போதெல்லாம், தலைக்குமேலே கரம் கூப்பிக் கண்மூடி நீர் சொரிகிறார்கள். தஞ்சம்மாவை ஏன் அது தொடவில்லை? கடைசிவரை தனது குலப் பெருமை ஒன்றைத் தவிர இன்னொன்றை அவள் ஏன் ஏற்க மறுத்துவிட்டாள்? ஒரு முழுநீள வாழ்வில் ஒரு கட்டத்தில் கூடவா தனது அஞ்ஞானத்தை அறிய முடியாமல் போய்விடும்? அவருக்கு வேதனை சுட்டது. வைணவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நாளை நான் கட்டியெழுப்பலாம். அது முடியாத காரியமல்ல. ஆனால் எனது எளிய முயற்சிகள் யாவும் தஞ்சம்மாவிடம் தோற்றுத்தான் போயிருக்கின்றன. இதனை எப்படி விழுங்கி ஜீரணிப்பது?ராமானுஜருக்கு நினைத்துப் பார்க்கவும் சங்கடமாக இருந்தது. தஞ்சம்மாவை விட்டு விலகுவது, பற்றுகள் அறுத்துத் துறவறம் ஏற்பது என்று முடிவு செய்தபோதுகூட, அவர் அவளை நினைத்துக் கொஞ்சம் அஞ்சவே செய்தார். எதுவும் அவளுக்குப் புரியாது என்பதல்ல. எதையும் புரிந்துகொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவள். காலம் முழுதும் கட்டுண்டு அவதிப்பட்டு மடிவதற்கா இப்பிறப்பு? அமைதியாக யோசித்தார். ஓர் உபாயம் தோன்றியது. தவறுதானா? சட்டென்று தர்ம சாஸ்திரங்களின் பக்கம் மனம் ஓடத் தொடங்கியது.

    பொய்மையும் வாய்மை இடத்து. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எழுதியவன் என்னமோ ஒரு அவஸ்தைப்பட்ட பிறகுதான் இதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆயிரம் பேர் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாராமல் எழுதி வைக்க வாய்ப்பில்லை. மனத்தை திடப்படுத்திக்கொண்டு அம்முடிவை எடுத்தார். வைணவர் ஒருவரை அழைத்தார். குலத்தால் தாழ்ந்தவர் என்று சொல்லப்பட்டாலும் குணத்தால் உயர்ந்த மனிதர் அவர். ஒரு சமயம் அவருக்குச் சாப்பாடு போட மறுத்து தஞ்சம்மா விரட்டியடித்த சம்பவம் ராமானுஜருக்கு நினைவில் வந்து போனது.'ஐயா, இன்று நீங்கள் என் வீட்டுக்கு உணவருந்தச் செல்ல வேண்டும்!'ராமானுஜர் கேட்டபோது அவர் பயந்தார். 'ஐயோ திரும்பவுமா? வேண்டாமே?''இல்லை. இம்முறை என் மனைவி உங்களை நடத்துகிற விதமே வேறாக இருக்கும்.

    அதற்கு நான் பொறுப்பு.''புரியவில்லையே.'ராமானுஜர் விறுவிறுவென்று ஒரு கடிதம் எழுதினார். அது தஞ்சம்மாவுக்கு அவளது அப்பா எழுதுவது போன்ற கடிதம்.அருமை மகளே, உன் தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு நீ உடனே ஊருக்கு வந்து சேர். இக்கடிதம் கொண்டு வரும் பாகவதோத்தமர் எனக்கு வேண்டப்பட்டவர்தான். களைப்போடு வருவார். அவரை உபசரித்து அனுப்பிவிட்டு ஊருக்குக் கிளம்பு.'இதைக் கொண்டுபோய் தஞ்சம்மாவிடம் கொடுங்கள்.' என்று ஒரு தட்டு நிறைய பழங்கள், வெற்றிலை பாக்கு, புடைவை, வேட்டியுடன் கொடுத்து அனுப்பி வைத்தார் ராமானுஜர்.

    அந்த மனிதர் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். 'அம்மா நான் உங்கள் அப்பாவின் ஊரில் இருந்து வருகிறேன்.'தஞ்சம்மாவுக்குக் குழப்பமாக இருந்தது. ஏற்கெனவே விரட்டியடித்த மனிதர். இப்போது பழம் பூ மரியாதைகளோடு வந்து நிற்கிறாரே?'உங்கள் தகப்பனார் இக்கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.'அவள் படித்துப் பார்த்தாள். தம்பிக்குத் திருமணம். உடனே கிளுகிளுப்பாகிவிட்டது. 'ஐயா நிற்கிறீர்களே, உட்காருங்கள்.''அவகாசமில்லை தாயே. நான் கிளம்ப வேண்டும்.''முடியவே முடியாது. அன்று உங்களுக்கு நான் செய்தது பெரும் அபசாரம். அதற்குப் பரிகாரமாக இன்று என் கையால் நீங்கள் சாப்பிட்டுத்தான் போக வேண்டும்' என்று சொல்லி கணப் பொழுதில் இலை போட்டாள்.
    பரபரவென்று பரிமாற ஆரம்பித்தாள். அவர் சாப்பிட்டு விடைபெற்றுப் போய்விட்டார்.அன்று மாலை ராமானுஜர் வீடு திரும்பியபோது தஞ்சம்மா ஓடோடி வந்து வரவேற்றாள். 'அப்பா கடிதம் அனுப்பியிருக்கிறார். தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.''நல்ல விஷயம் தஞ்சம்மா. நீ இன்றே புறப்பட்டுவிடு.''நீங்கள்?''சில வேலைகள் இருக்கின்றன. முடித்துவிட்டு வருகிறேன்.'அவள் ஊருக்குப் போன மறுகணமே ராமானுஜர் பேரருளாளன் சன்னிதியை நோக்கி ஓடத் தொடங்கினார்.

    'வந்துவிட்டேன் பெருமானே! இதைத் தவிர வேறு உபாயமில்லை என்று தெளிந்தேதான் அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு உன் தாள்தேடி வந்தேன். இந்தக் கணமே எனக்குத் துறவு தாருங்கள். இனி தாங்கமாட்டேன்.'அதற்குமேல் அவரைக் கதறவைத்துப் பார்க்கப் பேரருளாளனுக்கும் விருப்பமில்லை. அதனால்தான் அவன் திருக்கச்சி நம்பிக்கு உத்தரவு கொடுத்தான். அதனால்தான் அன்று அது நிகழ்ந்தது. ஊரே வியந்தது. உறவு துறந்து, பற்று துறந்து, பந்தம் அறுத்து, காஷாயம் தரித்த ராமானுஜரைக் கைகூப்பி வணங்கி நின்றது.'தஞ்சம்மாவைப் போன்ற ஒரு பேரழகி இத்தேசத்திலேயே கிடையாது. அவளையே துறக்கிறா ரென்றால் இவரது வைராக்கியம் எப்பேர்ப்பட்டது!' என்று வியக்காத வாயில்லை. ராமானுஜர் பெருமூச்சு விட்டார்.
    அன்று மறந்த தஞ்சம்மாவை அதற்குப் பிறகு யாதவரின் தாயார் வந்து போனபோதுதான் அவர் நினைக்க நேர்ந்தது.

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Powered by Blogger.