
'நான் உங்களை இனி மாமா என்று அழைக்க முடியாதல்லவா? பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசன்) என்று சொல்லி விட்டான்!'
தாசரதி தயங்கி தயங்கித்தான் பேசினான். ராமானுஜர் புன்னகை செய்தார். வாய் திறந்து அவர் சொல்லவில்லை. 'துறந்தேன், துறந்தேன், துறந்தேன்' என்று மும்முறை சொல்லி மூழ்கி எழுந்த போது 'முதலியாண்டானைத் தவிர' என்று அவர்தம் மனதிற்குள் சொல்லிக் கொண்டதை நினைத்துப் பார்த்தார். வைணவத்தை வாழ்க்கையாக ஏற்றதில் தாசரதி ராமானுஜருக்கு முன்னோடி, தமக்கையின் மகன். சிறுவயதில் இருந்தே ராமானுஜரின் நிழலாகத் தொடர்ந்து வருகிறவன். அவரது ஞானத்தின் ஜீவப் பிரவாகம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் முந்தி வந்து முக்குளித்தவன்.
'முதலியாண்டான்! உறவென்பது நமக்கு இனி அவன் ஒருவனோடு மட்டுமே. ஆனால், அவன் உலகம் உண்ட பெருவாயனாக இருக்கும்போது உறவில்லை என்று யாரைச் சொல்ல முடியும்?'
தாசரதியிடம் மேலும் சில் வினாக்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, துறவு ஏற்ற மறுகணம் ராமானுஜர் யாரை நினைத்தார் என்பது தன்னையா? தன்னைக் காட்டிலும் உயர்ந்த பாகவதோத்தமரான கூரத்தாழ்வானையா? அல்லது இன்னொரு தமக்கையின் மகனான வரத தேசிகனையா?
மூவருமே ராமானுஜர் துறவு கொண்டதும் முதன்முதலில் வந்து சீடர்களானவர்கள். அவரது உயிர்மூச்சு போல் உடனிருப்பவர்கள். இரவும் பகலும் அவர்களுக்கு யதிராஜரைத் தவிர வேறு நினைவே கிடையாது. அவருக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் வேறு திருப்பணி கிடையாது. ராமானுஜர் துறவுக் கோலம் கொள்வதற்கு முன்பிருந்தே அப்படித்தான்! அது ஞானத்தின் காந்த வடிவம். ஈர்க்கும் வல்லமை இயல்பிலேயே உண்டு.
'தயவு செய்து சொல்லுஙண்கள். ஒருவேளை வேறு யாரையாவது நினைத்தீர்களோ?'
தனது மானசீகத்தில் என்றோ குருவாக வரித்துவிட்ட ஆளவந்தாரையே கூட ராமானுஜர் எண்ணியிருக்கலாம். எப்பேர்ப்பட்ட தருணம்! எத்தனை பேருக்கு இதெல்லாம் வாய்க்கும்!
'சொல்லி விடுங்கள். நீங்கள் யாரை நினைத்தீர்கள்?'
மீண்டும் புன்னகை. அர்த்தம் பொதிந்த பேரமைதி. சொல்லலாமா? முதலியாண்டான் கேட்கிறான். என்னிடம் இருக்கிற பதில் அவனை எவ்விதமாக பாதிக்கும்? அவர் கண்மூடி, தன் நினைவில் மூழ்கத் தொடங்கினார்.
கண்ணுக்குள் மிதந்து வந்தது கோவிந்தனின் உருவம். கோவிந்த பட்டராகக் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் கிடக்கிற பூர்வாசிரமத்துத் தம்பி. சித்தி மகன். ஒரு கணம் ராமானுஜருக்கு சிலிர்த்து விட்டது. கோவிந்தன் இல்லாவிட்டால் அவர் கிடையாது. பதினெட்டு வயதிலேயே கங்கையில் போயிருக்கக்கூடும்.
'ராமானுஜா, எழுந்திரு. உடனே என்னோடு வா. இவர்கள் உன்னை கொல்லத் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.'
அசரீரி போல் உட்செவியில் மீண்டும் ஒலிக்கிற அதே குரல்.
கோவிந்தனைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான். குருவும் சீடர்களுமாகப் புனித யாத்திரை போய்க் கொண்டிருந்த தினங்களில் ஒரு நள்ளிரவுப் பொழுது. தன்னை எழுப்பி, தப்பிக்க வைத்து திரும்பிச் சென்ற கோவிந்தன், அதன்பிறகு திரும்பவேயில்லை. ஒரு செய்தி மட்டும் வந்தது.
'ராமானுஜா! உன் சித்தி மகன் கங்கையில் குளிக்கிறபோது அவனுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். திரும்பி வருகிற வழியில் காளஹஸ்தியில் பெருமானைச் சேவித்து, அங்கேயே கைங்கர்யம் செய்யத் தீர்மானித்து இருந்து விட்டான்!'
இது எப்படி, எப்படி எனறு ராமானுஜருக்கு ஆறவேயில்லை. தன்னினும் உயர்ந்த வைணவசீலராக கோவிந்தன் வரக்கூடுமென்று அவர் நினைத்திருந்தார். சட்டென்று எங்கோ தடம் மாறிவிட்டது.
எத்தனை முறை பேசியிருப்பேன்; எத்தனை விவாதித்திருப்போம். அத்வைதமும் அதன் ஏற்கவியலாத எல்லைப்பாடுகளும்.
யாதவப் பிரகாசரிடம் ராமானுஜர் பாடம் படிக்கச் சென்றபோது கோவிந்தனும் அதே பள்ளியில் வந்து சேர்ந்தவன்தான். காஞ்சியில் யாதவரைக் காட்டிலும் சித்தாந்தங்களில் கரை கண்டவர் யாருமில்லை என்று ஊரே சொல்லிக் கொண்டிருந்தது. என்னவோ, ராமானுஜருக்கு மட்டும் ஆசாரியருடன் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை. கோவிந்தனுக்கு அது தெளிவாகப் புரிந்தது. இவன் வேறு. இவன் சிந்தனை வேறு. இவனது வார்ப்பு வேறு. ஒரு சுயம்புவை ஆராய்ந்து அறிவது கடினம்!
அன்றைக்கு சாந்தோக்ய உபநிடதப் படம் நடந்து கொண்டிருந்தது. யாதவப் பிரகாசர் வரி வரியாக சொல்லி பொருள் விளக்கிக் கொண்டிருந்தார். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜருக்கு, சட்டென்று ஓரிடத்தல் ஆசிரியர் விளக்கிய பொருள் திடுக்கிட வைத்தது.
கப்யாஸம் புண்டரீகம் ஏவ மக்ஷிணி.
'கப்யாஸம் என்றால் குரங்கின் பின்புறம்' என்றார் யாதவப் பிரகாசர். அவர் படித்தது அதுதான். பிழை அவர் மீதல்ல. வழி வழியாகச் சொல்லித் தரப்பட்ட அர்த்தம். 'ஆனால் குருவே, இது அனர்த்தமாக அல்லாவா உள்ளது' 'கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? அதை கம் - பிப்தி - இதி - ஆஸ:' என்று பிரித்துப் பாருங்கள். சுடர்மிகு சூரிய மண்டலத்தில் உறையும் பரம்பொருளின் நயனங்களுக்கு உவமை சொல்லும் விதமாக இது புதுப்பிறப்பு எடுக்கும்! கதிரவனைக் கண்டு தாமரை மலர்வது போல விரிந்தவை பரமனின் கண்கள் என்கிறது இந்தப் பதம்.
யாதவர் திடுக்கிட்டுப் போனார். 'இங்கே நான் குருவா; நீ குருவா?' என்று கேட்டார்.
மீண்டும் வேறொரு நாள், இப்போது தைத்திரிய உபநிடதம்.
'சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம' என்றார் யதவர். சத்தியம், ஞானம் உளளிட்ட அனைத்தும் பிரம்மத்தை மட்டுமே பொருளாகக் கொண்டவை என்பது அவரது விளக்கம்.
'இல்லை ஐயா. அவை பிரம்மத்தின் பொருளாக இருக்க இயலாது. அவை பிரம்மத்தின் பல்வேறு குணங்கள்'
'எப்படிச் சொல்கிறாய்?'
'ஒரு பூ வௌ்ளை வெளேரென்று இருக்கலாம். கமகமவென்று மணப்பதாக இருக்கலாம்.பார்த்தாலே பரவசமூட்டும் பேரழகு உடையதாக இரு்கலாம். ஆனால் மணம் மட்டும் பூவல்ல. நிறம் மட்டும் பூவல்ல. அழகு மட்டும் பூவல்ல. பன்மைத் தன்மை பூவின் இயல்பு. ஆனால், பூ ஒன்றுதான். அதே மாதிரிதான் இதுவும். சத்யம், ஞானம் எல்லாம் பிரம்மத்தின் பண்புகள். ஆனால், பிரம்மம் ஒன்றுதான். அதுதான் மூலம். அதுதான் எல்லாம்'
அன்றைக்கே யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரைப் பிடிக்கமல் போய் விட்டது. ஒன்று இவன் இருக்க வேண்டும்.அல்லது நான் இருக்க வேண்டும்.
'ஐயோ... எங்களுக்கு நீங்கள் வேண்டும் குருவே, நாம் அவனைக் களைந்து விடலாம்' என்றார்கள் மாணவர்கள்.
'அதுதான் சரி' என்று யாதவர் முடிவெடுத்த சமயத்தில் ராமானுஜரின் தந்தை இறந்து போனார்.
No comments:
Post a Comment